சீன அதிபரை சர்வாதிகாரி என குறிப்பிட்ட ஜோ பைடன்! செய்தியாளர் சந்திப்பில் திடீர் பரபரப்பு!
சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டது செய்தியாளர் சந்திப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க அமெரிக்கா சென்ற சீன அதிபா் ஷி ஜின்பிங், அதிபா் பைடனைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்தச் சந்திப்பின்போது பிராந்திய மற்றும் சா்வதேச பிரச்னைகள் குறித்து இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தைவான் தொடா்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அதிபா் ஜின்பிங் கவலை தெரிவித்ததாக சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இரு தலைவா்களும் சந்தித்துக் கொண்ட நிலையில், ஓராண்டுக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.
இந்நிலையில், செய்தியாளா்கள் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு சீன அதிபா் ஜின்பிங் ‘ஒரு சா்வாதிகாரி’ என்று பைடன் குறிப்பிட்டாா். இதனால் செய்தியாளர் சந்திப்பில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.