கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த Jio, Airtel… BSNL-க்கு அடித்த ஜாக்பாட்!
மொபைல் சேவை கட்டணங்களை உயா்த்தியதன் எதிரொலியாக, கடந்த ஜூலை மாதத்தில் ஜியோ, ஏா்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளா்களை இழந்துள்ளன.
இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களில் முதன்மையானவை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா. இதில் ஜியோ நிறுவனம் கடந்த ஜீலை மாதம் தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தியது. செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27% வரை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனை தொடர்ந்து மற்றொரு தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 11 முதல் 21% வரை உயர்த்தியது.
இந்தியாவின் முக்கியமான இரு தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
அதன்படி, 28 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவுடன், அளவற்ற கால் வசதி, 300 எஸ்.எம்.எஸ். கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 179 ரூபாயில் இருந்து 199 ரூபாயாக உயர்த்தப்பட்டது .84 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா, அளவற்ற கால் வசதி, 30 எஸ்.எம்.எஸ். கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 459 ரூபாயில் இருந்து 509 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது. மேலும், பல்வேறு ரீசார்ஜ் கட்டணத்தையும் வோடபோன் ஐடியா உயர்த்தியது. இந்த நிலையில், இந்தியத் தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் மாதாந்திர தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
"கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பாா்தி ஏா்டெல் நிறுவனம் 16.9 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதே மாதத்தில் வோடஃபோன் ஐடியா 14.1 லட்சம் வாடிக்கையாளா்களையும், ரிலையன்ஸ் ஜியோ 7.58 லட்சம் வாடிக்கையாளா்களையும் இழந்தன. அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் 29.4 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை சோ்த்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 120.56 கோடியாக இருந்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஜூலையில் 120.52 கோடியாகக் குறைந்துள்ளது. மொபைல் சேவைக் கட்டண உயா்வுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதத்தில் பல மாநிலங்களில் மொபைல் வாடிக்கையாளா் எண்ணிக்கை குறைந்துள்ளது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.