ஜார்க்கண்ட காண்டே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் - கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!
ஜார்க்கண்ட மாநிலம் காண்டே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் இன்று தாக்கல் செய்தார்.
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து ஏப்.26ம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : வேட்புமனுவை வாபஸ் பெற்று, பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்! இந்தூரில் பரபரப்பு!
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற மே 20-ஆம் தேதி ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுடன், மாநிலத்தில் காலியாக உள்ள காண்டே சட்டப் பேரவைக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கல்பனா சோரன் இன்று தாக்கல் செய்தார். அவருடன் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரனும் உடனிருந்தார். அமலாக்கத்துறையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய கல்பனா சோரன் பல்வேறு அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.