ஜார்க்கண்ட் : 45 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நில மோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் ஜாா்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
இடைக்காலத்தில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பயி சோரன் பொறுப்பேற்றார். இந்நிலையில், ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, முதலமைச்சர் பதவி வகித்து வந்த சம்பயி சோரன் ராஜினாமா செய்தார். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் அண்மையில் பதவியேற்றார்.
இதையும் படியுங்கள் : வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
இதைத் தொடா்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார். 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவையில் ஜேஎம்எம் கட்சிக்கு 27 எம்எல்ஏக்கள், காங்கிரஸுக்கு 17, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1, பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் தனது தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.