திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் - பக்தர்கள் குளிக்க தடை!
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிக அளவிலான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதால் உடல் ஒவ்வாமையை கருத்தில்கொண்டு பக்தர்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்
செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயில் கடற்கரையில்
அதிகளவில் கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் கரை பகுதியில் ஒதங்குவதாகவும், இதனால் பக்தர்களுக்கு தோல் பாதிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்டு உடல் ஒவ்வாமை
ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. கடலில் ஆழப்பகுதியில் இருக்ககூடிய இந்த வகை ஜெல்லி மீன்கள் ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கரை ஒதுங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் இந்த வகை
மீன்கள் அதிக அளவில் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. இதனால் அங்கு நீராடும் பக்தர்களுக்கு உடல் ஒவ்வாமைகள் ஏற்படும் என இதுகுறித்து கோயில் இணை ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திருச்செந்தூரில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு உடல் ஒவ்வாமைகள் ஏற்படும் என்பதால் கோயில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் கடலில் நீராடுபவர்களையும் காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.