விடைத்தாளில் ‘ஜெய்ஸ்ரீராம்’…மதிப்பெண்களை வாரி வழங்கிய 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்!
விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்களை வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வெழுதும் மாணவர்களுக்கு அவர்கள் எழுதும் விடைகளின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதே வழக்கம். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதற்கு மாறாக ஒரு சம்பவம் நிகழந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்பூரில் உள்ளது வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழத்தில் ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ள நிலையில் சமீபத்தில் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.
இதையும் படியுங்கள் : “இன்னும் சில நாட்களில் மேடையிலேயே மோடி கண்ணீர் விட்டு அழக்கூடும்” – ராகுல் காந்தி!
இந்த தேர்வில் குளறுபடி உள்ளதாகவும், ஆசிரியர்கள் பணம் வாங்கிக் கொண்டு பாஸ் போடுவதாகவும் குற்றம் சாட்டிய அப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், பல்கலைக்கழக மருந்தியல் பாடப்பிரிவின் 4 மாணவர்களின் விடைத்தாள்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன. அப்போது இந்த உண்மை வெளிவந்துள்ளது.
திவ்யன்சு சிங்கின் புகாரையடுத்து டிப்ளமோ இன் பார்மசி படித்து வரும் நான்கு மாணவர்களின் விடைத்தாள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன. அப்போது அவர்களின் விடைத்தாள்களின் பல இடங்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகமும், தங்களுக்கு பிடித்த பல கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் எழுதி வைத்துள்ளனர். ஆனால் இந்த மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்டு முறைப்படி அந்த மாணவர்களின் விடைத்தாள்களை மீண்டும் திருத்தியதில், மாணவர்கள் அனைவரும் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்கள். ஆர்டிஐ தாக்கல் செய்த முன்னாள் மாணவர், பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநருக்கு ஆர்டிஐ விவரங்களை அனுப்பியதோடு, இவை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படியுங்கள் : நைனிடாலில் காட்டுத் தீ… ராணுவ உதவியுடன் தீயணைப்பு பணிகள் தீவிரம்!
இந்த விவகாரத்தை அறிந்த ராஜ்பவன் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இது குறித்து விசாரணை நடத்த பல்கலைகழகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையின் இரண்டு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு 50% மதிப்பெண்கள் வழங்கிய வினய் வர்மா, ஆஷிஷ் குப்தா என்ற 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.