For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஜெயம் ரவியிடம் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது” - விவாகரத்து அறிக்கைக்கு #ArthiRavi பதில்!

10:54 AM Sep 11, 2024 IST | Web Editor
“ஜெயம் ரவியிடம் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது”   விவாகரத்து அறிக்கைக்கு  arthiravi பதில்
Advertisement

விவாகரத்து குறித்து தன்னிச்சையாக நடிகர் ஜெயம் ரவி முடிவு செய்ததாக ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவின் மிகவும் ரசிக்கப்பட்ட காதல் ஜோடிகளில் ஒன்று ஜெயம் ரவி – ஆர்த்தி. கடந்த 2009-ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிக்கு ஆரவ் மற்றும் ஆயான் என்று இரு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக் கொள்ளவிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஜெயம் ரவி மற்றும ஆர்த்தி இருதரப்பிலும் இது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில்  தனது விவாகரத்தை தெரிவிக்கும் வகையில் நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று முன்தினம் (செப். 9) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.

நேற்று (செப். 10) ஜெயம் ரவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு அக். 10-ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் ஆர்த்தி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.

மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்“.”

இவ்வாறு ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement