For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#JammuKashmirElection | நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற குலாம் நபி ஆசாத்தின் கட்சி!

09:37 PM Oct 09, 2024 IST | Web Editor
 jammukashmirelection   நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற குலாம் நபி ஆசாத்தின் கட்சி
Advertisement

ஜம்மு காஷ்மீர் சட்டபேரவை தேர்தலில் குலாம் நபி ஆசாத்தின், ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது.

கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டியிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம், உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார். இந்த நிலையில், அரசியலில் மூத்த தலைவராக அறியப்படும் குலாம் நபி ஆசாத்தின் கட்சிக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது அவரின் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் மக்களவைத் தோ்தலுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி ’ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி (டிபிஏபி)’ என்ற தனிக்கட்சியை தொடங்கினாா். இதனையடுத்து, மக்களவைத் தோ்தலை சந்தித்த அவரது கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.

இந்த சூழலில், ஜம்மு காஷ்மீரில் நடந்து சட்டபேரவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி, 23 தொகுதிகளில் போட்டியிட்டது. இதற்கிடையே, குலாம் நபி ஆசாத் உடல்நிலை காரணமாக தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இது, அவரின் கட்சி மக்கள் மத்தியில் கவனம் பெற முடியாத சூழலை உருவாக்கியது. அக்கட்சி வேட்பாளர்கள் சிலர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்ப பெறவும் செய்தனர்.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, அவரது கட்சி வேட்பாளர்கள் 5 பேர், நோட்டாவைவிட குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியைச் சந்தித்தனர். போட்டியிட்ட 23 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு 10 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. குலாம் நபி ஆசாத்தின் கட்சி சராசரியாக 5.34 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

Tags :
Advertisement