#JammuKashmir தேர்தல் - INDIA கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு!
ஜம்மு காஷ்மீர் மாநில்த்தில் தேர்தல் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஒருங்கிணைந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கொண்ட இந்த தேர்தலே கடைசியாகும். அப்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களையும் கைப்பற்றின. அப்போது பாஜகவும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018-ல் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.
இதனால் அந்த மாநிலத்தில் முதலில் ஆளுநர் ஆட்சி, பின்னர் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. அத்துடன் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலமானது சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், சட்டசபை இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு முதலே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை செயல்படாமல் இருந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும், சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பது அந்த மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கை வைக்கப்பட்டு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. இதனடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இன்று நிறைவடைந்துள்ளது. அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங். 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதேபோல இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பாந்தர்ஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகின்றன