10 ஆண்டுகளுக்குப் பின் #JammuKashmir தேர்தல் - 3 கட்டங்களாக வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
நாடு விடுதலைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளைக் கொண்டதாக அந்த மாநிலம் அங்கீகரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதலமைச்சரே ஜம்மு காஷ்மீரின் பிரதமராக கருதப்பட்டார். இந்த நடைமுறை 1972-ம் ஆண்டு முடிவுக்குக் வரப்பட்டது.
அன்று முதல் ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தவரை மொத்தம் 8 சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டது. அம்மாநிலத்தில் முதலில் 76 சட்டசபை தொகுதிகள் இருந்தன. பின்னர் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 87 ஆக உயர்த்தப்பட்டன. அப்போது பெரும்பான்மைக்கான இடங்கள் 39ல் இருந்து 44 ஆக உயர்த்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் 1972-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியாக இருந்தது. ஆனால் 1977-ல் தேசிய மாநாட்டு கட்சி, ஜனதா கட்சி உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் 'தனிப் பெரும்பான்மை' பலத்தை சிதைத்தன. 1977, 1983 தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இருந்தது. பின்னர் 1987 தேர்தல் முதல் பாஜகவும், 2002 தேர்தல் முதல் தேசிய மாநாட்டுக் கட்சியும் பிரதான அரசியல் கட்சியாக உருவெடுத்தன.
இதனால் அந்த மாநிலத்தில் முதலில் ஆளுநர் ஆட்சி, பின்னர் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. அத்துடன் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலமானது சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், சட்டசபை இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு முதலே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை செயல்படாமல் இருந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும், சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பது அந்த மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. இதனடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “செப். 18, 25 மற்றும் அக். 1 என 3 கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அக். 1ம் தேதி ஹரியானாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக். 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்” என தெரிவித்தார்.