Jammu Kashmir சட்டமன்ற தேர்தல் - #RahulGandhi இன்று பிரசாரம்!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள ஜம்மு காஷ்மீருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகை தர உள்ளார்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று வெளியிட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஆக. 26ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இன்று டெல்லியில் இருந்து ஜம்மு வரும் ராகுல் காந்தி ஜம்மு- காஷ்மீர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் விகார் ரசூல் வாணிக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். விகார் ரசூல் வாணி பனிஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டூரு பகுதிக்குச் செல்லும் அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் குலாம் அகமது மீர்-ஐ ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதன் பின்னர் ஸ்ரீநகரில் இருந்து மாலை டெல்லி திரும்புகிறார்.