இந்திய சினிமா குறித்தும், அவதார் அடுத்த பாகம் குறித்தும் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்த சுவாரஸ்ய தகவல்...!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் குறித்தும் 'அவதார்' படத்தின் உருவாக்கம் குறித்தும் பேசியுள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம்ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’. இந்தப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை புரிந்ததது. இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் 3-ம் பாகம் இன்னும் வெளியாகவில்லை. 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அவதார் 4-ம் பாகத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் 5-ம் பாகம் இன்னும் உருவாகவில்லை. ஆனால், இதன் 6 மற்றும் 7-ம் பாகங்களுக்கான யோசனையும் இருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஐந்து பாகங்களின் ஸ்கிரிப்ட்டை முழுமையாக எழுதிவிட்டோம். 6 மற்றும் 7-வது பாகங்களுக்கான ஐடியா என்னிடம் இருக்கிறது. அதற்கான நேரத்தில் அதை வழங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் சாட்டர்ன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிலளித்தார்.