அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கான பந்தல்கால் நடும் விழா கோலாகலம்!
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பந்தக்கால் நடும்விழா அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாநகர காவல் ஆணையர் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்குக் கொடிமரம் என்று சொல்லக்கூடிய பந்தக்கால் நடும் விழா பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
800-க்கும் மேற்பட்ட காளைகள், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துவக்கமாக பந்தக்கால் ஊன்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது, பந்தககால் ஊன்றும் நிகழ்வில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பந்தக்கால் ஊன்றி தற்காலிக கோட்டைகள் மற்றும் வாடிவாசல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அவனியாபுரம் கிராம மக்கள் தலைமையில் அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்லும் சாலையில் தற்காலிக வாடிவாசலும், வாடிவாசல் பின்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் வாடிவாசல் வரை காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் வரிசையாகச் செல்ல மூங்கில் தடுப்புகளும், அவனியாபுரம் பிரிவிலிருந்து பெரியார் செல்லும் ரோட்டின் இருபுறமும் பார்வையாளர்கள் நிற்பதற்காக மூங்கில் தடுப்புகளும், காளைகள் பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம் அமைய உள்ளது.