கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு - வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்!
ஜன. 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள அலங்காநல்லூர் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில்” நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கென மதுரையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் நாளை (ஜன. 19) முதல் இணையத்தில் பதிவு செய்வது அவசியம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
“மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் வரும் ஜன. 24-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை நாளை (ஜன. 19) மதியம் 12.00 மணி முதல் நாளை மறுநாள் (ஜன. 20) மதியம் 12.00 மணி வரை பதிவு செய்திடல் வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற் தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.