இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு!
இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து தங்கள் வேட்கையை வெளிப்படுத்துகின்றனர். தைப்பொங்கல் நெருங்க நெருங்க காளைகளும், மாடுபிடி வீரர்களும் வாடிவாசலில் இறங்கும் நாளை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கொரோனா தொற்று – ஒரேநாளில் 12பேர் உயிரிழப்பு
கடந்த ஆண்டு திருச்சி வந்த போது இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி இலங்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டை இலங்கை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் நந்தா உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.
200 மாடுகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. இதில் 50 மாடுபிடி வீரர்கள் தமிழகத்திலிருந்து வந்துள்ளனர்.
சம்பூர் பத்திரகாளி அம்மன் கோயில் மாடு முதல் மாடாக வாடிவாசலில் அவிழ்துவிடப்பட்டது. மாடு பிடிப்பவர்களுக்கு மின்விசிறி, ரைஸ் குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுக்கு 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.