ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக கொடுத்த குடும்பத்தினர் - நெகிழ்ந்த மணமக்கள்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மணமகளுக்கு அவர் பாசமாக வளர்த்த
ஜல்லிக்கட்டு காளை, ஆடு, நாய், கோழிகளை குடும்பத்தினர் சீதனமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பாரம்பரிய முறையில் திருமணம் சீதனங்களை மக்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், மானாமதுரை அருகே பீசார்பட்டினம் பகுதியில் ஒரு திருமணம் நடந்துள்ளது. பெரியகண்ணனூரைச் சேர்ந்த பொறியாளர் அரவிந்துக்கும், கீழமேல்குடியைச் சேர்ந்த பட்டதாரி சந்தியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சந்தியா ஜல்லிகட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள் , சண்டை சேவல் ஆகியவை வளர்த்து வந்துள்ளார்.
இத்திருமணத்தில் மணமகளுக்கு நகைகள், பாத்திரங்கள் அடங்கிய சீர்வரிசை வழங்கப்பட்டது. மேலும் மணமகள் பாசமாக வளர்த்த ஜல்லிகட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய், சண்டை சேவல் ஆகியவற்றை திருமண மண்டபத்தின் மேடையேற்றி போட்டோ எடுத்து கொண்டு, மற்ற சீதனங்களோடு சேர்த்து சீதனமாக வழங்கி குடும்பத்தினர் மணமக்களை வாழ்த்தினர். அதை பெற்று கொண்ட மணமக்கள் சந்தியா, அரவிந்த மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.