"அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு" - ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆத்மி குற்றம் சாட்டிய நிலையில், சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிவடைந்து கடந்த மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.
இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்து விசாரித்து வந்தது. தன்னை கைது செய்ததை எதிர்த்தும், நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் சிபிஐ விசாரணை தொடர்பாக அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இந்த சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமான நிலையை எட்டியிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக நேற்று ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் அதிஷி கூறியதாவது, "கெஜ்ரிவால் நீரிழிவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு உள்ளார்.
அவரது சர்க்கரை அளவு மோசமான அளவு குறைந்துள்ளது. பாஜக அரசு சதிசெய்து போலி வழக்கில் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தது. அங்கு அவரது உடல்நலம் கவனிக்கப்படாமல் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. அவரது உடல்எடை 8.5 கிலோ குறைந்தது.
அவரது சர்க்கரை அளவு 50க்கும் கீழ் பலமுறை சென்றுள்ளது. இது கவலைக்குரியதாகும். இதற்கு சிறையில் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அவர் பக்கவாதம் அல்லது மூளையில் ரத்தக்கசிவு போன்ற கொடிய தாக்குதலுக்கு ஆளாகலாம். இதுதொடர்பாக நாங்கள் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இவரது குற்றச்சாட்டுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. கெஜ்ரிவாலின் உடல் நிலை மற்ற கைதிகளை போலவே தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவ நிபுணர்களின் வழக்கமான மதிப்பீடுகளை அவர் பெற்று வருவதாகவும் சிறை நிர்வாகம் கூறியிருக்கிறது.
சிறை எண் 2-ன் கண்காணிப்பாளர் அலுவலகம் மேலும் கூறியதாவது,
"அவரது எடை சிறிது குறைந்திருப்பது உண்மைதான். ஆனால் வேறு எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை. அவருக்கான நோய்க்கு உரிய மருந்தை அவர் பெற்று வருகிறார். ஜூன் 2 முதல் ஜூலை 14 வரை 63.5 கிலோவிலிருந்த 61.5 கிலோ வரை அவர் எடை குறைந்திருக்கிறார். எடை குறைவுக்கு குறைந்த அளவு உணவை மற்றும் குறைந்த கலோரிதான் காரணம்.
கெஜ்ரிவால் 24 மணி நேரமும் மூத்த மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில் இருக்கிறார். எனவே தேவையற்ற வியூகங்கள் அவசியமற்றது" என்று கூறியுள்ளார். மேலும் ரத்த அளவு குறைந்தது குறித்து பேசிய அவர், "ரத்த சர்க்கரை அளவு மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ ஆலோசனைப்படி அவருக்கு மருந்தும் உணவும் வழங்கப்படுகிறது" என்று விளக்கமளித்துள்ளார்.