திருப்பதி பயணத்தை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி... மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும் ஆவேசம்!
இறை நம்பிக்கை படிவத்தை நிரப்பிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்வதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி செயல்பட்டு வந்தார். அவரின் ஆட்சிகாலத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், அந்த நெய்யை ஆய்விற்கு அனுப்பி, விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி அறிக்கையும் வெளியிட்டது. நாடு முழுவதும் இது பெரும் சர்ச்சையான நிலையில், தமிழ்நாட்டின் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய், திருப்பதிக்கு நெய் வழங்கிய ஏஆர். புட்ஸ் நிறுவனம்தான் வழங்கியது என வதந்தி பரவியது. இதற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்து, வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார் அளித்தது.
தொடர்ந்து லட்டு பிரச்னை தீவிரமானது. இந்த பிரச்னை ஒருபுறம் வளர்ந்துகொண்டே இருந்தநிலையில், சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க ஆந்திராவில் உள்ள கோயில்களிலும் நாளை சிறப்பு பூஜை நடத்த முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். குறிப்பாக திருப்பதி கோயிலுக்கு தான் சென்று பாவத்தை போக்க பரிகார பூஜை செய்வதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில் தனது பயணத்தை திடீரென ஜெகன் மோகன் ரெட்டி ரத்து செய்துள்ளார்.
திருப்பதி செல்லும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதால், திருப்பதி கோயிலில் மாற்று மதத்தினர் செல்லும்போது இறை நம்பிக்கை தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால் அவரது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
“நான் என் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பைபிளைப் படிக்கலாம். ஆனால் வெளியே நான் இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களை மதிக்கிறேன். மக்களுக்கு என் மதம் தெரியாதா? முதலமைச்சராக இருந்த நான், வெங்கடேசப் பெருமானுக்கு புனித வஸ்திரங்களை சமர்ப்பித்துள்ளேன். என் மதம் மற்றும் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கவில்லை. என்னை கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றுகூற தெலுங்கு தேசம் கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?
“மதச்சார்பற்ற என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபடாதீர்கள். “இது என்ன இந்துத்துவா? மனிதநேயம் என்பது இந்து மதம். நல்ல செயல்கள் செய்வது இந்து மதம். எந்த ஒரு இந்து கெட்ட காரியங்களை செய்கிறாரோ, அவர் என் பார்வையில் உண்மையான இந்து அல்ல. நான் கோயிலுக்கு பலமுறை சென்றுள்ளேன். பிரதமருடன் சென்றேன். பல தலைவர்களுடன் சென்றேன். அப்போது ஏன் என்னை விசாரிக்கவில்லை? இப்போது என் நம்பிக்கை ஏன் கேள்விக்குறியாகிவிட்டது? இது என்ன வகையான மதச்சார்பின்மை?
ஐந்து வருடங்களாக வெங்கடேச பெருமானுக்கு புனித வஸ்திரங்கள் சாற்றிய என்னை, கோயிலுக்குச் செல்லவேண்டாம் என்று கேட்கிறீர்களா? ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்த எனது தந்தை, இறைவனுக்கு புனித வஸ்திரங்களை சமர்பித்தார். என் மதத்தையும், நம்பிக்கையையும் கேள்வி கேட்க நீங்கள் யார்? நீங்கள் ஒரு அறிவிப்பு படிவத்தை நிரப்ப விரும்பினால், அதை நிரப்பவும். என் நம்பிக்கையும் மதமும் மக்களுக்குத் தெரியாதா?” என பல கேள்விகளை அடுக்கியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.