போதை பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக் எங்கே? கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை!
போதைப் பொருள் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக்கின் கார் ஓட்டுநரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த 15ம் தேதி 50 கிலோ போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த முகேஷ், ரகுமான், அசோக் குமார் ஆகியோர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் இதற்கு மூளையாக செயல்பட்டு வருவதும் உறுதியானது. 3 ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்பில் போதைப்பொருள் விற்பனை செய்ததும் உறுதியானது.
இதையும் படியுங்கள் : தருமபுரம் மடாதிபதியை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 4 பேர் கைது – பாஜக, திமுக பிரமுகர்களுக்கு வலைவீச்சு!
இதனையடுத்து, போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் சென்னை வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்துள்ளனர்.
இந்த சோதனையில் நிலம் தொடர்பான ஆவணங்கள், திரைப்படங்கள் தயாரிப்பு தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், காசோலை புத்தகங்கள் உள்ளிட்ட பலவற்றை கைப்பற்றி உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜாபர் சாதிக் வீடு 3 மாடிகள் கொண்டது. அங்குள்ள அறைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் உள்ள அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது சகோதரர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
ஜாபர் சாதிக் 3 கார்களை பயன்படுத்தி வந்ததை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்தனர். அதில், ஜாபர் சாதிக்கிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் ஒருவரை ஈசிஆர் பகுதியில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.