“ஜடேஜாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது..!” - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஈரப்பதமான களச் சூழலில் ஜடேஜா 22 ரன்கள் மட்டுமே கொடுத்தது திருப்புமுனையாக அமைந்தது என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் விளாசினார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி, 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்வாட் போட்டிக்குப் பின் அளித்த பேட்டியில் கூறியதாவது :
“மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகைய ஈரப்பதத்துடன் கூடிய களத்தில் விளையாடுவது கடினமானது. மேலும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது நல்ல செயல்பாடுதான். கடைசி ஆட்டத்தில் கூட, 20 ஓவர்கள் பேட்டிங் மற்றும் 20 ஓவர்கள் ஃபீல்டிங் இருந்தது. இன்றும் கிட்டத்தட்ட அதேதான். சதத்தை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் 220 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றே விரும்பினோம்.
இதையும் படியுங்கள் : சேப்பாக்கத்தில் கர்ஜித்த சிஎஸ்கே... ஹைதரபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!
கடந்த ஆட்டங்களில் சில தவறுகளைச் செய்தோம். இன்று நாங்கள் களத்தில் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். திட்டமிட்டபடி செயல்பட்டு, சூழ்நிலைகள் என்ன என்பதை அறிந்தோம். துஷார் தேஷ்பாண்டே நன்றாக பந்துவீசுகிறார். அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. ஜடேஜாவும் சிறப்பாக பந்துவீசினார். ஈரப்பதமான களச் சூழ்நிலையில் ஜடேஜா 22 ரன்கள் மட்டும் கொடுத்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது”
இவ்வாறு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.