“டெஸ்ட் கேப்டன் பதவி... ஜடேஜா தகுதியானவர்” - இந்திரனுக்கு ஆதரவாக பேசிய சந்திரன்!
இந்திய நட்சத்திர கிரிக்கெட்டர் ரோகித் சர்மாவின் திடீர் ஓய்வு முடிவு, டெஸ்க் கிரிக்கெட்டில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு புது கேப்டனையும் தேட வைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்த ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்படும் வரும் நிலையில், கேப்டன் பதவிக்கு ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜா பரிசீலிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அஸ்வின்,
“எல்லோரும் சுப்மன் கில் டெஸ்ட் கேப்டன் என பேசுகிறார்கள். இதில் எனக்கு சிறிய வருத்தம் உள்ளது. அது சரியா, தவறா அல்லது அதுதான் முடிவா என கேட்காமல், அந்த முடிவை நோக்கியே அனைவரும் செல்கின்றனர். கேப்டன் என்ற பதவி பொறுப்பு வாய்ந்தது. அந்த பொறுப்பில் இருப்பவர் ஒருவரை உருவாக்கவும் முடியும், ஒருவரை இல்லாமல் செய்யவும் முடியும். இப்படிப்பட்ட பொறுப்பு வகிக்க வேண்டியவர்களுக்கு ஒரு நேர்காணல் வைக்க வேண்டும்.
அவர்களுடைய புரிதல் என்ன என்பதை அறிய வேண்டும். அதில் தெளிவாக உள்ளவரையே தலைவர் பதவிக்கு கொண்டு செல்ல வேண்டும். பும்ரா இருக்கிறார். அவரிடம் கேட்கலாம். அல்லது ஜடேஜா. சென்னை அணிக்கு அவரது தலைமை சரிவராமல் இருக்கலாம். ஆனால் அவரிடம் கேட்கலாமே. ஜடேஜாவிற்கு விருப்பம் உள்ளதா? இல்லையா என்பதை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
எதை வைத்து இவர் கேப்டன்சி பொறுப்பை செய்வார், செய்யமாட்டார் என முடிவெடுக்கிறார்கள்?. எல்லோருக்கும் கேப்டன்சிக்கான கதவு திறந்திருக்க வேண்டும். சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை மேல்நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதும் என்னுடைய ஆசைதான். ஆனால் என்னுடைய கருத்தை நான் கூறினேன்” என தெரிவித்தார்.