"பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜாக்டோ-ஜியோ 18-ஆம் தேதி போராட்டம்" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ&ஜியோ அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்களிடம் முந்தைய அரசு குறித்த கொந்தளிப்பையும், திமுக மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக இப்போது துரோகம் செய்வது கண்டிக்கத்தக்கது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டமும், அதன் பிறகும் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்போவதாக ஜாக்டோ&ஜியோ அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து அரசு ஊழியர்கள் அமைப்புகளும், ஆசிரியர்கள் அமைப்புகளும் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை. அதுமட்டுமின்றி, இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவால் வாக்குறுதியாக அளிக்கப்பட்டவை தான். அந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்த வேண்டிய தேவையே எழுந்திருக்காது.
ஆனால், உண்மை நிலை என்னவென்றால், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக திமுக 10 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நலநிதி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்ற ஒற்றை வாக்குறுதி மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. திமுகவால் வாக்குறுதியாக அளிக்கப் பட்ட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கால கட்டங்களில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நடத்திய போராட்டங்கள் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, ஒடுக்கப்பட்டனவே தவிர, அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட இன்று வரை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக அரசு செய்த அப்பட்டமான நம்பிக்கைத் துரோகங்கள், மோசடிகள், ஏமாற்று வேலைகள் ஏராளம்... ஏராளம். தமிழ்நாட்டில் அரசுத்துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க முந்தைய ஆட்சியிலேயே இ.ஆ.ப. அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அறிக்கையும் பெறப்பட்டு விட்டது. அதனடிப்படையிலேயே தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை செய்வதற்கு பதிலாக மூத்த இ.ஆ.ப.அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர் குழுவை அமைத்தது தான் அரசு ஊழியர்களுக்கு எதிரான திமுக அரசின் முதல் ஏமாற்று வேலை.
பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி குழு செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த அக்குழு அதன் பிறகு தான் கருத்துக் கேட்புக் கூட்டங்களையே நடத்தியது. செப்டம்பர் இறுதியில் இறுதி அறிக்கைக்கு மாற்றாக, எந்த பரிந்துரையும் இல்லாத இடைக்கால அறிக்கையை மட்டுமே ககன்தீப் சிங் பேடி குழுவை தாக்கல் செய்ய வைத்தது திமுக அரசின் இண்டாவது மோசடி.
ககன்தீப்சிங் குழு அதன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த போது, இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் கூடுதல் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் கூடுதல் காலக்கெடு தேவைப்படுவதாக தெரிவித்திருந்தது. ஆனால், அதன் பின் இன்றுடன் 42 நாள்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ககன்தீப் சிங் குழு இதுவரை அடுத்தக்கட்ட கலந்தாய்வைத் தொடங்க வில்லை. இது திமுக அரசின் வழிகாட்டுதலில் ககன்தீப் சிங் பேடி குழு நடத்தும் மூன்றாவது நாடகமாகும்.
இன்னும் 3 மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதற்குள்ளாக ககன்தீப்சிங் பேடி குழு, அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வது அல்லது தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன் அறிக்கையை பெற்றுக் கொண்டு முடிவெடுக்க கால அவகாசம் இல்லை என்று கூறி அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான் திமுக அரசின் திட்டம். திமுகவின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும்.
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளிலும் உள்ள நியாயத்தை பாட்டாளி மக்கள் கட்சி உணர்ந்திருக்கிறது; அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், அரசு ஊழியர்களின் எந்தக் கோரிக்கையையும் வஞ்சக எண்ணம் கொண்ட கொடுங்கோல் திமுக அரசு நிறைவேற்றப்போவதில்லை என்பது தான் உண்மை. இந்த வஞ்சக எண்ணத்திற்கும், அரசு ஊழியர்களுக்கு இழைத்த துரோகத்திற்குமான தண்டனையிலிருந்து திமுக ஒருபோதும் தப்ப முடியாது. அந்த தண்டனை வரும் தேர்தலில் திமுகவுக்கு கண்டிப்பாக கிடைக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமையும் போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாத அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பாமக நிறைவேற்றும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.