அரசு தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட் - குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 13பேருக்கு ரொக்கப்பரிசு!
தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் பொருட்டு இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்டவை மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிா்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், இதர நாட்களில் முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளை கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : இந்திய அணி உலகக்கோப்பைகளை முத்தமிட காரணமாக இருந்த 3 கேட்சுகள்… வரலாற்றின் சுவாரஸ்ய தருணங்கள்!
இதன்படி, ஜூன் மாதத்தில் பயணித்தவா்களில் 13 பயணிகள் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். மாநகா் போக்குவரத்துக்கழகம்(சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் கணினி குலுக்கல் முறையில் அவா்களை நேற்று (ஜூலை -1ம் தேதி ) தோ்ந்தெடுத்தாா். இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000-மும், மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000-மும் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.