“எந்த ஏரியா Bro நீங்க.. உங்கள இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே...” - #Robot நாயை பார்த்து தலைதெறித்து ஓடிய நிஜ நாய்கள்!
ஒரு ரோபோ நாய் உயிருள்ள நாய்க்குட்டிகளை அணுக முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு மனிதன் தன்னைப்போல, அச்சு அசல் மாறாத மற்றொரு மனிதனை சந்திப்பானா? என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அது தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் சாத்தியப்படுத்தப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்ப உதவியோடு மனிதர்களை போன்ற அதிநுட்ப ரோபோக்களை சர்வதேச நாடுகள் உருவாக்கி வருகின்றன. இது நாளடைவில் வளர்ச்சியடைந்து, உண்மையான மனித முகம் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகி வருகின்றன.
அந்த வகையில், ஹோட்டல்களில் உணவு விநியோகிக்க, சூப்பர் மார்கெட்டுகளில் மனிதர்களுக்கு உதவ என பலவகை ரோபோக்கள் முதல்கட்டமாக உருவாக்கப்பட்டு உபயோகத்தில் இருந்து வருகின்றன. அதேபோல், நாய் போன்று 4 கால்களை கொண்டு நடக்கும் ரோபோக்களின் வீடியோக்களை நம்மால் இணையத்தில் காண முடியும்.
இந்நிலையில் நாய் போன்ற அமைப்புடைய ரோபோ ஒன்று பொதுவெளியில் நடந்து செல்லும் போது, அதனை கண்டு உயிருள்ள நாய்கள் அச்சப்படும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பூங்காவில் ரோபோ நாய் ஒன்று, சில மீட்டர் தூரத்தில் நின்று உயிருள்ள உண்மையான நாய்க்குட்டிகளை பார்க்கிறது. பின்னர் உயிருள்ள நாய்க்குட்டிகளை நெருங்கி செல்கிறது. வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் ரோபோ அவற்றை நெருங்கும்போது, அவை பயத்தில் தலைதெறித்து ஓடுகின்றன. தூரத்தில் நின்று ரோபோவை வெறித்து பார்க்கின்றன.
இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்காலத்தில், இதேபோல மனித உருவத்தில் உருவாகியுள்ள ரோபோக்களை பார்த்து உயிருள்ள மனிதர்களும் இதே வகையில் பயப்படும் காலம் வரும் என இணைய வாசிகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.