"கடந்த 2 நாட்களாக கண்ணில் தண்ணீரோடதான் இருந்தேன்" - இயக்குநர் #SundarC நெகிழ்ச்சி!
மதகஜராஜா படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து கடந்த 2 நாட்களாக கண்ணில் தண்ணீரோடதான் இருந்தேன் என படத்தின் இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர் சண்டக்கோழி, தாமிரபரணி, துப்பறிவாளன், ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் ‘மதகஜராஜா’.
இப்பட்த்தில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இப்படம், நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மதகஜராஜா திரைப்படம் வரவேற்பை பெற்று வரும் நிலையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இயக்குநர் சுந்தர் சி மற்றும்
குஷ்பூ ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பாக இயக்குநர் சுந்தர் சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான பொங்கல். மதகஜராஜா திரைப்படம் 12 வருடம் கழித்து வெற்றியை பெற்றுள்ளது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து கடந்த 2 நாட்களாக கண்ணில் தண்ணீரோடதான் இருந்தேன். இந்த திரைப்படத்தை பொங்கல் அன்று திரையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். மதகஜராஜா திரைப்படம் ரூ.1000 கோடி கலெக்ஷன் வருமா? என கூற நான் தயாராக இல்லை. படம் வெற்றி பெற்று அனைவரையும் மகிழ்ச்சி படுத்தினால் போதும்.
கலெக்ஷன் என்பது என்னுடைய துறை இல்லை. நான் ஒரு இயக்குனர். நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். படம் பார்க்க வரும் மக்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக சிரித்து மகிழ வேண்டும். எல்லா வகையான ஜானர் திரைப்படங்களும் வர வேண்டும். என்னுடைய ஜானர் இது தான். நான் பொழுதுபோக்கான படங்களை தான் எடுத்துள்ளேன். 12 வருடம் என்பது போன்று தெரிவில்லை. மதகஜராஜாவை புது படம் போல தான் அனைவரும் பார்த்து வருகின்றனர்"
இவ்வாறு இயக்குநர் சுந்தர் சி தெரிவித்தார்.