ஆரோக்கியத்திற்கான IV ட்ரிப்ஸ் - அதிகரிக்கத் தொடங்கும் புதிய கலாச்சாரம்..!
உடல்நலம் குறைவுற்றபோது IV மூலம் மருந்துகளை எடுத்துக்கொண்டு வரும் நிலையில், உடல்நிலை சீராக இருக்கும்போதே ஆரோக்கியத்திற்காக IV மூலம் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் வழக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அண்மையில் நடிகை ஜான்வி கபூர், IV சிகிச்சை பெற்று வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்ட நிலையில், பிரபல நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஜான்வி கபூர் மேற்கொண்டது ஆரோக்கியத்திற்கான IV தெரபி என்று விளக்கம் அளித்தது.
பிரபலங்களின் மத்தியின் இந்த IV தெரபி தற்போது அதிகரித்து வருகிறது. ரிஹானா, அடீல், ஜஸ்டின் பீபர், கெண்டல் ஜென்னர் போன்ற வெளிநாட்டு பிரபலங்களும் IV ட்ரிப்ஸை பயன்படுத்தி வருகின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து விநியோகத்தை உறுதி செய்யவும் உதவுவதாக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
Wellness Drips என்றால் என்ன?
ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் இந்த IV ட்ரிப்ஸ் (Wellness Drips), தனிநபரின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படுகின்றன. வைட்டமின் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெட்ண்ட்ஸ் நிரம்பிய மருந்தினை நேரடியாக தோலில் செலுத்துவதன்மூலம் நச்சுத்தன்மை அகற்றப்படுகிறது, ஆரோக்கியமான தோற்றத்தையும் கொடுக்கிறது. வாய்வழி உட்கொள்வதைக் காட்டிலும், IV மூலம் எடுத்துக்கொள்வது அதிக பலனைக் கொடுப்பதாக தோல் மருத்துவர் சிரஞ்சீவ் சப்ரா தெரிவித்துள்ளார்.
தீவிர உடற்பயிற்சியால் உருவாகும் லாக்டிக் மற்றும் அமினோ ஆசிட்களை வெளியேற்றவும் ட்ரிப்கள் (மருந்து) உள்ளன. குமட்டல், நீரிழப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடவும் மக்கள் IV ட்ரிப்களை எடுத்துக் கொள்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் C மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெட்ண்ட்ஸ் நிரம்பிய ட்ரிப்களும் பயன்படுத்தப்படுகின்றன. மலட்டுத்தன்மை போன்றவற்றிற்காக சிகிச்சை பெறுவோர் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரின்கீழ் IV ட்ரிப்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குருகிராம் தோல் மருத்துவர் சீமா ஓபராய் லால் தெரிவித்துள்ளார்.
இது பாதுகாப்பானதா?
ஒரு நபரின் உடல்நிலை மற்றும் IV ட்ரிப்களின் கலவையைப் பொறுத்தே, இதன் பாதுகாப்பு அமைந்துள்ளதாக மருத்துவர் சிரஞ்சீவ் தெரிவித்துள்ளார். அதேபோல், தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட IV
சிகிச்சை நெறிமுறைகள் சாத்தியமான ஆபத்துகளைத் தணிப்பதாகவும், சிறிய பக்க விளைவுகள் பொதுவானவை என்றும் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் IV தெரபி
திருமணத்திற்கு முன்பாக வைட்டமின் உந்துதலுக்காகவும், உடலில் நீரின் அளவை சமமாக வைத்திருப்பதற்காகவும் IV தெரபி எடுத்துக்கொள்வது இன்று பலரிடம் அதிகரித்து வருகின்றன. கொண்டாட்டங்களுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கும் IV தெரபி வழங்கும் வழக்கமும் அதிகரித்து வருகின்றன. இது பரவலாக இல்லை என்றாலும், ஒரு புறம் நடைபெற்று வருவதாக மருத்துவர் ஆகான்ஷா சங்வி தெரிவிக்கிறார்.
பிரபலங்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள இந்த IV ட்ரிப்ஸ் தெரபி முறை, விரைவில் உலகம் முழுவதும் உள்ள சாமானிய மக்களிடமும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.