For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்கும் IUML - திமுகவுடன் பேச்சுவார்த்தை நிறைவு!

05:26 PM Feb 12, 2024 IST | Jeni
ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்கும் iuml   திமுகவுடன் பேச்சுவார்த்தை நிறைவு
Advertisement

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியையே தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது.

முன்னதாக விசிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை விசிக கொடுத்துள்ளது. 3 தனித் தொகுதியும் 1 பொதுத் தொகுதியும் கேட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், தேசிய செயலாளர் அப்துல் பாசித், மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : திமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்த விசிக - முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், “திமுகவிடம் எங்களுடைய கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் கருத்துகளையும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம். ஐந்தாண்டு காலம் ராமநாதபுரத்தில் நவாஸ்கனி சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளார். நவாஸ் கனியின் பணியை தொகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாராட்டி உள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியையே மீண்டும் திமுகவிடம் கேட்டுள்ளோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்று பரிசீலிப்பதாக குழு தலைவர் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். திமுக நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்தது இல்லை. எல்லா கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், ஒரே ஒரு தொகுதி ராமநாதபுரம் தொகுதியை எங்களுக்கு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement