For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்... அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்..?

12:36 PM Nov 02, 2023 IST | Jeni
ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்    அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்
Advertisement

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய தகவல்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்பிள் செல்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.....

Advertisement

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் மத்திய அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், “அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் உங்கள் செல்போன் கண்காணிக்கப்படுகிறது", எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிவ சேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திரினாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்களில் தொடங்கி, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் வரை ஆப்பிள் செல்போன்களை அதிகம் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். சாமானியர்கள் சட்டென்று வாங்க இயலாத அளவிற்கு ஆப்பிள் செல்போன்களின் விலைப்பட்டியல் இருந்தாலும், வாழ்வில் ஒரு முறையேனும் அதை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான மக்களுக்கு உண்டு.

ஆப்பிள் செல்போன்கள் கைக்கு அடக்கமாக, ஆடம்பர தோற்றத்துடன் காணப்படுவது மட்டுமே இதற்கு காரணமல்ல. இவைகளைத் தாண்டி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது, ஐ போன்களில் வைத்துள்ள பிரத்யேக பாதுகாப்பு அம்சங்கள்தான். பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தும் ஆன்ட்ராய்டு செல்போன்களை ஒப்பிடுகையில் ஆப்பிள் செல்போன்களில் சைபர் தாக்குதல் நடைபெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்கின்றனர் சைபர் கிரைம் வல்லுனர்கள். அப்படி என்ன சிறப்பம்சங்கள் ஆப்பிள் போன்களில் உள்ளன....?

மற்ற ஆன்ட்ராய்டு செல்போன்களைப் போல் அல்லாமல் ஆப்பிள் செல்போனின் உதிரி பாகங்கள், வன்பொருள் மற்றும் மென்பொருள் போன்றவற்றை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் தனி கவனம் செலுத்துகிறது. அங்கீகரிக்கப்படாத செயலிகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய இயலாது. ஆப்பிள் ஸ்டோரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இதனால் இந்த ஆப்பிள் செல்போன்களில் வைரஸ் தாக்குதல்கள் நடப்பது மிக மிக குறைவு. இந்த செல்போனில் உள்ள மென்பொருள் சேவையில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அவை உடனே கண்டறியப்பட்டு சரிசெய்யப்படுகிறது. இதனால் ஹேக்கர்கள் இந்த செல்போன்களில் இருந்து தனிநபர் விபரங்களை திருட முடியாது. ஆப்பிள் செல்போன்களை திறக்க பயன்பாட்டாளர்கள் உருவாக்கும் கடவுச்சொல் மிக அவசியம்.

அது இல்லாமல் ஆப்பிள் செல்போன்களை திறக்க முடியாது என்பது தனிச்சிறப்பு. அரசு சார்ந்து அல்லது அரசு சாரா நிறுவனங்கள் மூலம் ஆப்பிள் செல்போன்களை ஹேக் செய்ய முயற்சி நடந்தால், பயன்பாட்டாளருக்கு அதுகுறித்த தகவல் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக பகிரப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும்.

இதுதவிர இன்னும் பல்வேறு தனிப்பட்ட அம்சங்களையும் ஆப்பிள் செல்போன்கள் கொண்டுள்ளன. இத்தனை பாதுகாப்பான சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாலேயே மக்களால் இந்த ஆப்பிள் செல்போன்கள் பெரிதும் விரும்பப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் கண்காணித்தல் தொடர்பான எச்சரிக்கை ஆப்பிள் நிறுவனம் மூலம் விடுக்கப்பட்டது.

தற்போது, அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சர்ச்சையையடுத்து, ’’நாங்கள் அனுப்பியுள்ள இந்த எச்சரிக்கை தவறாகக்கூட இருக்கலாம். ஆனால் இதன் தீவிரத்தை கருத்தில் கொள்ளவும்’’ என பட்டும் படாமல், ‘இருக்கு ஆனா இல்ல...’ என்பதுபோல் தெரிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Tags :
Advertisement