"சினிமாவில் படத்தொகுப்பாளர்களுக்கு பணமும் புகழும் கிடைப்பதில்லை" - நடிகை தேவயானி
புகழையும், பணத்தையும் எடுத்துச் செல்வது நடிகர்களும், இயக்குனர்களும் தான். படத்தொகுப்பாளருக்கு எதுவும் கிடைப்பதில்லை என நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.
திரைப்பட படத் தொகுப்பாளர்கள் சங்க தேர்தலில், வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், உதயகுமார், நடிகர்கள் இளவரசு, சிங்கம் புலி மற்றும் நடிகைகள் தேவயானி, இனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகை தேவயானி கூறியதாவது,
"ஒரு இயக்குனர் ஒரு சிறந்த படத்தொகுப்பாளராகவும் இருக்க வேண்டும்.
அல்லது ஒரு சிறந்த படத்தொகுப்பாளர் ஒரு படத்தை காப்பாற்ற வேண்டும். ஒரு சிறந்த படத்தொகுப்பாளர் இல்லையென்றால் ஒரு சிறந்த படம் வராது. எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு மருத்துவருக்கு தெரிவது போல், ரசிகர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை ஒரு படத்தொகுப்பாளர் தான் செய்ய முடியும்.
பாரதிராஜா ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர். புகழையும், பணத்தையும் எடுத்துச் செல்வது நடிகர்களும், இயக்குனர்களும் தான். படத்தொகுப்பாளருக்கு எதுவும் கிடைப்பதில்லை. எந்த நிகழ்ச்சியிலும் படத்தொகுப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. வருங்காலங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனித்தனி முதலாளிகளின் கையில் சினிமா சிக்கியுள்ளது. அதை முதலில் காப்பாற்ற வேண்டும்" என தேவயானி தெரிவித்தார்.