“இந்தியாவில் ராமாயணம் குறித்து பேசுவதற்கு பயமாக இருக்கிறது!” - #Ramayana திரைப்படத்தின் காஸ்டிங் இயக்குநர்
இந்தியாவில் ராமாயணம் குறித்து பேசுவதற்கு பயமாக இருக்கிறது என ராமாயணம் படத்தின் காஸ்டிங் இயக்குநர் (நடிகர், நடிகைகளை தேர்வு செய்பவர்) கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
ஹிந்தியில் 'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் நிதிஷ் திவாரி. இவர்தான் அடுத்ததாக ராமாயணத்தை திரைப்படமாக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் நிதிஷ் திவாரி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் யஷ், ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதற்காக நடிகர் ரன்பீர் கபீருக்கு புதிய குரல் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்.
இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஆஸ்கர் வென்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் உடன் நமது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இதன் காஸ்டிங் இயக்குநர் (நடிகர் நடிகைகளை தேர்வு செய்பவர்) முகேஷ் சாப்ரா கூறியதாவது:
ராவணனுக்கு பழிவாங்க ஆசை. ஆனாலும் அவரும் காதலில் இருக்கிறார். நான் புரிந்துகொண்டதுவரை ராவணன் கொடூரமானவர், பழிவாங்க நினைப்பவராக இருந்தாலும் தனது தங்கையின் மீதுள்ள அன்பினால்தான் பழிவாங்க நினைக்கிறார். ராமன், ராவணன் ஆகிய இருவருமே அவர்வர் வழிகளில் சரியானவர்.
இந்தியாவில் ராமாயணம் குறித்து பேசுவதற்கு பயமாக இருக்கிறது. ஏனெனில் நாட்டில் தற்போதைய நிலவரம் அப்படியிருக்கிறது என்றார்.
ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதானவர் ஹான்ஸ் ஜிம்மர் ஆஸ்கர் விருதினை 2 முறையும், கிராமிய விருதினை 4 முறையும், கோல்டன் குளோப் விருதினை 3 முறையும் பெற்றுள்ளார். ஹாலிவுட்டிலும் இதனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.