”பாலாவை போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்” - KPY பாலாவுக்கு சீமான் ஆதரவு..!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தம்பி பாலா மீது சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த 10 நாட்களாக சிலர் செய்யும் எதிர்மறையான அவதூறு தாக்குதல் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரை சர்வதேச கைக்கூலி என்கின்றனர்.
சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி. எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்? உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது? எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, அவருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது? அவர் எப்படி மருத்துவமனை கட்டுகிறார்? என்றெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி செய்வது ஏன்? இதையெல்லாம் கேட்பவர்கள் எப்படி இவ்வளவு கோடிக்கு சமாதி கட்டுனீங்க? எப்படி இவ்வளவு கோடி போட்டு திரைப்படம் எடுக்குறீங்க? அப்படியென்று யாரையும் கேட்பது இல்லையே ஏன்? தம்பி பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன? அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அரசும், அது சார்ந்த நிர்வாக அமைப்புகளும்தான்.
பாலா போன்ற உதவும் உள்ளங்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை; துண்டாடாமல் இருங்கள். போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள். இப்பொழுது தம்பி பாலாவை பற்றி அவதூறு பேசி, நீங்கள் சாதித்தது என்ன? பிறர் துயர் துடைக்கும் தம்பி பாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தவிர இதனால் நிகழ்ந்த நன்மை என்ன?
அன்புத்தம்பி பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினை தொடர்ந்து செய்துகொண்டே இரு. தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணைநிற்கின்றோம். எத்தனையோ தாய்மார்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அன்று உன்னிடம் சொன்னதையே மீண்டும் உனக்குச் சொல்கிறேன்.மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள்! அதனால்தான் உன்னை விரும்புகிறார்கள்!"
என்று தெரிவித்துள்ளார்.