"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே"... பிக்பாஸ் வீட்டில் திரையிடப்பட்ட #SK திரைப்படம்!
போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திரைப்படம் திரையிடப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதி வழங்கி வருகிறார்.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் நடிகர் ரஞ்சித் ஒருவரை தவிர சின்னத்திரை பட்டாளங்கள் களமிறங்கியது. ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த சீசன் ஆரம்பம் முதலே அதிருப்தியை கொடுத்து வந்தது.
உள்ளே நுழைந்த 18 போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கப்போகிறோம் என்று அதிரடியாக 6 வைல்ட் கார்ட் என்ட்ரியை களமிறக்கினர். ஆனால் அப்போதும் ஆட்டத்தில் எந்த ஒரு சுவாரஸ்யமும் எஞ்சவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை வீட்டில் இருந்து ரவீந்தர், தர்ஷா, அர்னவ், சுனிதா, ரியா, வர்ஷினி, சிவகுமார் என அடுத்தடுத்து குறைவான வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறினர். பொம்மை டாஸ்க், டெவில் Vs ஏஞ்சல் என்று சேலஞ்சிங்கான டாஸ்க் கொடுக்கப்பட்ட போதிலும் அதனை சுவாரஷ்யம் குறைவாக விளையாடியுள்ளனர் என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சம்பவம் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் பிக் பாஸ் வீட்டில் திரையிடப்பட்டது. இப்படம் இரவுக் காட்சியாக, நொறுக்குத் தீனிகளுடன் திரையிடப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அமரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் புரமோஷன் செய்யப்பட்டதும், இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.