"இப்போ குறைஞ்சிருக்கு.. இன்று இரவும் நாளையும் மழை தொடரும்.." - #TamilnaduWeatherman பிரதீப் ஜான்!
இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாத்தியக் கூறுகள் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மியான்மர் கடலோர பகுதியில் நிலவி வந்த காற்றின் சுழற்சியின் காரணமாக, அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தடைபட்டது.
பின்னர் மியான்மர் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி வலுவிழந்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தின் கீழ், அதே பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ரூ.5000 வரை பரிசுகளை பெறலாம் என #PinarayiVijayan படத்தோடு பரவும் லிங்க் – உண்மை என்ன?
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது..
”சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சீரான மழை இன்னும் சில மணி நேரங்கள் தொடரும்.தென் சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர் ஆகிய பகுதிகளில் முதலில் மழை நிற்கும், அதன் பின்னர்தான் மத்திய, வட சென்னை பகுதிகளில் மழை பெய்வது குறையும். அதேபோல மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யக்கூடும் “ என பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.