“முழுக்க முழுக்க மக்களுக்காகத்தான்” - டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினேன்.
கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட மத்திய அரசு துணைநிற்க கூடாது என்றும் வலியுறுத்தினோம். டாஸ்மாக் ஊழல், போதைப் பொருள் விற்பனை என மிகவும் மோசமான நிலைக்கு தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது, அதனால் மத்திய அரசு தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காகத் தான் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தோம்” என தெரிவித்தார்.