"2026-ம் ஆண்டு 234 தொகுதிகளில் திமுக வென்றாலும் ஆச்சரியமில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலுவின் இல்ல திருமணம் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், "அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை. மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக ஒரு ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம். 2026ம் ஆண்டும் திமுக ஆட்சிதான் அமையும். எதிர்க்கட்சி கூட்டணியை நிச்சயம் ஒரு கை பார்ப்போம். நம்மை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் எத்தகைய கூட்டணி வந்தாலும் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஊர்ந்து கொண்டிருந்ததாக கூறியதால் திமுகவினருக்கு கோபம் வருகிறது. ஊர்ந்து என்று கூறியது பிடிக்கவில்லை என்றால் தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளலாம் என்றேன். தவழ்ந்து என நான் கூறவில்லை, எடப்பாடி பழனிசாமியே தன்னை அப்படிதான் வெளிப்படுத்துகிறார்.
நெருக்கடிகள் பலவற்றை சந்தித்து தான் திமுக வளர்ந்துள்ளது. எமர்ஜென்சியை பார்த்து பயப்படாமல் தீரத்துடன் எதிர்த்தவர்கள் நாம்" என்று தெரிவித்துள்ளார்.