"#HemaCommittee போல மற்ற துறைகளிலும் கமிட்டிகள் அமைத்தால் நன்றாக இருக்கும்" - நடிகை நிவேதா தாமஸ் கருத்து!
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும், மலையாள சினிமாவில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் நடிகை நிவேதா தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது.
இந்த அறிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து, பல திரையுலகிலும் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கபட வேண்டும் எனவும், மலையாளம் மட்டுமின்றி மற்ற திரையுலகில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும் வெளிவருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை நிவேதா தாமஸ் ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசிய நிவேதா தாமஸ், “ஹேமா கமிட்டி அறிக்கை உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. வீட்டில் இருப்பதைவிட பணியிடத்தில் தான் பெண்கள் அதிக நேரம் இருக்கின்றனர். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். ஹேமா கமிட்டிபோல் மற்ற துறைகளிலும் கமிட்டிகள் அமைத்தால் நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.