Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” - திருமாவளவன்

05:03 PM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

Advertisement

திமுக, விசிகி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 140 க்கும் மேற்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்தும், நாடாளுமன்ற அவையில் அத்துமீறலை தடுக்க தவறிய மோடி,  அமித் ஷா ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அளவில் முதன் முதலில் வீதிக்கு வந்து போராடியது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.  ஒரு ஜனநாயக சக்தி
பிரதமராக இருந்திருந்தால் நிச்சயமாக இது குறித்து விவாதம் செய்திருப்பார். நாடாளுமன்றத்திற்கே பாதுகாப்பு இல்லை எனும் பொழுது இவர்கள் யாருக்கு
பாதுகாப்பு வழங்குவார்கள்?  நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்.பி. பிரதாப் சிங்கை இதுவரை அழைத்து விவரம் கேட்கவில்லை.

பாஜகவின் ஆட்சி நிர்வாகம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இந்த
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு ஒரு உதாரணம்.  எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இல்லாமலேயே அவர்கள் நினைத்த சட்ட மசோதாக்களை இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காகவே எம்பிக்களை இடைநீக்கம் செய்துள்ளனர். 2024-ல் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற பயம் பாஜகவிற்கு வந்துவிட்டது.
அதனால் தான் இவ்வளவு அவசரமாக சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகிறார்கள். இவ்வாறு திருமாவளவன் மேடையில் பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

மக்களவையில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய எம்பிக்களை இடைநீக்கம் செய்து, பாஜக அரசு ஜனநாயக படுகொலையை செய்துள்ளது.  இது மோசமான முன் உதாரணம். அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவராக உள்ள அமித்ஷா உடனடியாக பதவி விலக
வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன்,  பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக ஆட்சி காலத்தில் சட்டத்துறை செயலாளராக பதவி வகித்துள்ளார். இப்பொழுது இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததோடு,  வழக்கு தொடர்பான ஆவணங்களையும் அவரே சேகரித்துள்ளார்.  இதன் மூலம் இந்த தீர்ப்பு ஒரு சார்பாக இருக்க கூடுமோ என்று எண்ணும் வகையில் தரவுகள் தெரிகிறது.

அயோத்தி வழக்கு உள்ளிட்ட அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புகளை பார்க்கும் பொழுது
நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதன மயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது. விசிக சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த வெல்லும்
சனநாயக மாநாடு மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி
வைக்கப்படுகிறது.  முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைவர்களுடன் கலந்து
பேசி மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

Tags :
Illegal Money Transfer Casejudgementmadras HCMinisternews7 tamilNews7 Tamil UpdatesponmudiPrisonthirumaofficialthol. thirumavalavan
Advertisement
Next Article