"அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால் பாதியை இந்தியா எட்ட 75 ஆண்டுகள் ஆகலாம்" - உலக வங்கி திடுக்கிடும் அறிக்கை!
அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில், ஒரு கால் பகுதியை எட்டுவதற்கு இந்தியாவிற்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் வரை ஆகலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடுத்த சில பத்தாண்டுகளில் இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்களைக் கொண்ட நாடுகளாக மாறுவதில் கடுமையான தடைகள் எழலாம் எனவும், இந்தியா, அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பகுதியை எட்டுவதற்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தனிநபர் வருவாயில், கால் பகுதியை எட்டுவதற்கு சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும் ஆகலாம் என்று, உலக மேம்பாட்டு அறிக்கை 2024-ல் நடுத்தர வருவாய் அமைப்பு என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டு கால தரவுகளை ஆய்வு செய்தபோது, ஒவ்வொரு நாடுகளும், அதன் செல்வ வளம் அதிகரிக்கும்போது, வழக்கமாக ஒரு நபருக்கு ஆண்டுக்கு அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% என்ற இலக்கை தொடுகின்றன. இது இன்றைய 8000 அமெரிக்க டாலர் என்பதற்கு சமம். இது, உலக வங்கி, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் என வகைப்படுத்தும் வரம்பிற்கு இடையே உள்ளது.
2023-ம் ஆண்டு இறுதியில், உலகம் முழுவதும் 108 நாடுகள், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் என வரையறுக்கப்பட்டன. ஒவ்வொரு நாடும், ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்திக் குறியீட்டில், தனிநபர் வருவாயானது 1,136 அமெரிக்க டாலர் முதல் 13,845 அமெரிக்க டாலர்களைக் கொண்டிருக்கும். இந்த நாடுகள் கிட்டத்தட்ட 600 கோடி மக்களின் நாடாக உள்ளது. இங்குதான் உலக மொத்த மக்கள் தொகையில் 75% மக்கள் வாழ்கிறார்கள். இங்கு, ஒவ்வொரு 3 பேரிலும் 2 பேர் மிக மோசமான ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள்.