"கங்கனா விவகாரத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் பயங்கரவாதிகள் என சொல்வது தவறு" - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி
"கங்கனாவை அறைந்த சம்பவம் என்பது கோபத்தின் வெளிப்பாடு , அவை நடந்திருக்கக் கூடாதுதான். அதற்காக ஒட்டுமொத்த மாநிலத்தையும் பயங்கரவாதிகள் என சொல்வது தவறு" என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டது. இவ்விழாவில், உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியோடு சேர்த்து மொத்தம் 72பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களில் 30பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 5பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும் 36பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கடந்த ஜூன் 7ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அங்கு வழக்கமான சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார்.
SHOCKING RISE IN TERROR AND VIOLENCE IN PUNJAB…. PIC.TWITTER.COM/7AEFPP4BLQ
— KANGANA RANAUT (MODI KA PARIVAR) (@KANGANATEAM) JUNE 6, 2024
டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா ரணாவத் தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா ரனாவத் விஸ்தாரா விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கங்கனா ரனாவத்தை அறைந்த விவகாரத்தில் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் தெரிவித்ததாவது..
“ கங்கனாவை அறைந்த சம்பவம் என்பது கோபத்தின் வெளிப்பாடு. கங்கனா ரணாவத் முன்பு சொன்ன கடுமையான விமர்சனங்கள் அந்தப் பெண்ணின் மனதில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவம் நடந்திருக்கக்கூடாதுதான். ஆனால் அதற்குப் பதிலாக நடிகையாகவும் ஒரு எம்பியாகவும் இருக்கிற கங்கனா ரணாவத் முழு பஞ்சாபையும் பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு..." என பகவந்த்மான் தெரிவித்துள்ளார்.