"90நாட்களுக்கும் மேலாக ஒரு முதலமைச்சர் சிறையில் இருப்பதை ஏற்க முடியாது" - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!
"90நாட்களுக்கு மேலாக விசாரணைக்காக ஒரு முதலமைச்சர் சிறையில் இருப்பதை ஏற்க முடியாது" என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிவடைந்து கடந்த மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.
இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தன்னை கைது செய்ததை எதிர்த்தும், நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இரு தரப்புகளின் வாதங்களை விசாரணை செய்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தீர்ப்பினை வெளியிட்டார்.
90 நாட்களுக்கும் மேலாக ஒரு முதலமைச்சர் சிறையில் இருப்பதை அடிப்படையாக கொண்டும், மேலும் அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாங்கள் இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் தற்போது ஜாமின் பெற்றிருந்தாலும் சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சிறையில் இருந்து வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.