'மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை' - மேயர் பிரியா பேட்டி !
சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை இணைந்து நீர்மிகு பசுமையான சென்னையை நோக்கி எனும் கடற்கரை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி - கல்லூரி மாணவர்கள், தன்னார்வளர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கடற்கரையில் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சென்னையை சுத்தமாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி ஏற்று தூய்மைப் பணியினை துவக்கி வைத்தனர். அப்போது பேசிய மேயர் பிரியா,"
"இது நாம் வாழும் சென்னை, நம்ம கடற்கரை. இதனை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் அடுத்த தலைமுறைக்கு நல்ல சுற்றுச்சூழலை கொடுக்க வேண்டியது அவசியமாகவும், கட்டாயமாகவும் உள்ளது. சென்னை மெரீனா கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது கடமையாக இருக்கிறது.
பள்ளி கல்லூரிகள் விடுமுறை தினத்தன்று பொழுதுபோக்குகளை நோக்கி செல்லாமல் பொறுப்புணர்வோடு வந்திருக்கக்கூடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இதை குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் தூய்மை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒவ்வொருவரிடமும் மாற்றம் வந்தால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நமது கடமை" என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "சென்னையில் தொடர்ந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். விளையாட்டுத் திடல்கள், கடற்கரைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலைகள் மட்டும் இல்லாமல் மணல் பகுதியிலும் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குப்பையை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்பதை ஒவ்வொரு தனிநபரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.