Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இஸ்லாமியர்கள் மனது புண்படும்படி கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல" - பிரதமர் மோடிக்கு இபிஎஸ் கண்டனம்!

12:31 PM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல என பிரதமர் மோடியின் பேச்சிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இரண்டாம் கட்டமாக சில மாநிலங்களில் வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல எதிர்கட்சிகள் சார்பில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.  இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

சர்ச்சைக்குரிய வகையில் அப்படி என்ன பேசினார் பிரதமர் மோடி?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது.

“ ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,  மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து விடுவார்கள்.  பின்னர் அதனை ஊடுருவல்காரர்களிடம்  கொடுத்து விடுவார்கள் .   அதேபோல காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,  ஒவ்வொருவரின் சொத்துகளும் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நமது நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்குத் தான் முதல் உரிமை உள்ளது என்றார்.  அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?  இதன் பொருள் உங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதுதானே.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நமது பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி கணக்கிடும்.  தங்கம் என்பது  ஒரு பெண்ணின் சுயமரியாதை.  ஒரு பெண் அணிந்துள்ள தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல,  அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு நாடு முழுவதிலும் உள்ள பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்கள் எழுப்பி உள்ளனர்.  இந்நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,  இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.  இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும்.  வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும்,  நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.  அரசியல் கட்சித் தலைவர்களும்,  ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும்,  மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும்,  மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.  தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது,  இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

Tags :
ADMKAIADMKElection2024Elections with News7 tamilElections2024Narendra modiPMO India
Advertisement
Next Article