“மாஞ்சோலை தோட்டத்தை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது!” - தமிழ்நாடு அரசு!
மாஞ்சோலை தோட்டத்தை டேண்டீ நிர்வாகம் எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். BBTC நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்காது. ஆகவே மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரவும், அரசு பணியை குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது Tan Tea நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தொடக்கத்தில் நிர்வாகம் லாபம் ஈட்டினாலும், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இயங்கி வருகிறது. இத்தகைய சூழலில் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைகேட்ட நீதிபதிகள், “டேன் டீ நிர்வாகம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள
நிலையில், அவர்களை கட்டாயப்படுத்தவும் இயலாது” என தெரிவித்தனர். மனுதாரர்கள் தரப்பில், மாஞ்சோலை பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “நீதிமன்றம் ஏற்கனவே மாஞ்சோலை பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையும் மீறி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தொடரலாம் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் பலரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க விரும்புவதால், வழக்கை விரிவான விசாரணைக்காக ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.