“கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டியது அவசியம்” - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
5 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இதில் மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் மாநில உரிமைகளை போராடி பெற வேண்டிய சூழல் உள்ளது. மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான், வளர்ச்சி அடையும், இந்தியா வலிமை அடையும்.
இதனை உணர்ந்து மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்கின்ற கொள்கையினை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கி வருகிறது. நாட்டிலேயே முதல்முறை மத்திய, மாநில உறவுகள் குறித்து விவாதிக்க தமிழ்நாட்டில் குழு அமைக்கப்பட்டது.
மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த மாநில அரசின் கல்விக் கொள்கையை நீர்த்து போக செய்து, முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நீட் எனும் ஒற்றைத் தேர்வு வாயிலாக மட்டுமே மருத்துவ கல்விகளை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டு விட்டது.
இந்த நீட் தேர்வு கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் பல மாணவர்களின் மருத்துவக் கனவுகள் சிதைந்து போயுள்ளன. இதேபோல் மாநில பட்டியலில் இருந்த கல்வி, ஒத்திசைவு பட்டியலுக்கு மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மும்மொழிக் கொள்கை எனும் போர்வையால் இந்தியை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்க மத்திய அரசு முயல்கிறது. இதனை திமுக அரசு எதிர்க்க தமிழ்நாட்டு கல்வி நிதி சுமார் ரூ.2500 கோடியை விடுவிக்காமல் மாணவர்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
எனவே மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதி செய்யும் வண்ணம், கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது. சரக்கு மற்றும் சேவை வரி ஆரம்ப கட்டத்திலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இதனால் மாநிலங்கள் ஈட்டக்கூடிய வருவாய் பறிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதிலும் அதற்கா உரிய இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. மேலும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது” என எடுத்துரைத்தார்.