“திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியை எப்படி வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது” - செல்லூர் ராஜூ!
“திமுகவின் பதில்களிலிருந்து கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியை எந்த அளவிற்கு வைத்துள்ளார்கள் என தெரிய வருகிறது” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையின் கைகள் எந்த அளவிற்கு கட்டப்பட்டுள்ளது என மக்களுக்கு தெரியும். சமூக வலைதள அழுத்தத்தின் காரணமாக யார் அந்த சார்? எனும் கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் யார் அந்த சார்? எனும் கேள்வியை எழுப்பி உள்ளனர்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழகத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா? என திமுக அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளார். பாலகிருஷ்ணனின் கேள்விக்கு முரசொலி வாயிலாக திமுக அரசு பதில் அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுக்கிறது.
தமிழகத்தில் நடைபெறக்கூடிய பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பெரும்பான்மையாக திமுகவினரே ஈடுபடுகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை திமுக சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது போல, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் டைம் டேபிள் போட்டு பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சவுக்கை எடுத்து சர்வாதிகாரியாக மாறி தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவேன் என முதல்வர் சொன்னார். ஆனால் அண்ணாமலை சவுக்கை எடுத்து தனக்கு தானே தண்டனை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொது இடங்களில் பேசுவதை விட்டு விட்டு, வேண்டியதை பெற்றுச் செல்லுங்கள் என கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இதிலிருந்து திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியை எந்த அளவிற்கு வைத்துள்ளார்கள் என தெரிய வருகிறது. தனிப்பட்ட முறையில் பாலகிருஷ்ணன் யாரிடமும் எந்த நிதியும் வாங்க மாட்டார். தேர்தலுக்காக திமுகவிடமிருந்து நிதியைப் பெற்றதால் இது போன்ற பேச்சுகள் வருகிறது.
அதிமுகவில் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம். டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். டிடிவி, சசிகலா கருத்துக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தான் பதில் அளிப்பார். எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மதுரையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.