"தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது" - உத்தவ் தாக்கரே
பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் நேற்று வெளிவந்தன. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது. இந்த நிலையில், பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் அதிகபட்சமாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றதும், சிவசேனாவை உடைத்து புதிய அணியை உருவாக்கிய மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.