“நாடாளுமன்றத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டது அவமானம்” -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
“நாடாளுமன்றத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டது அவமானம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்.பி புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி மக்களவையில் பெரியாரின் பெயரை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம். அப்துல்லா பேசியதில் பெரியாரின் பெயரை நீக்கிவிட்டு அவைக்குறிப்பேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”மாநிலங்களவையில் திமுக எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்! மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.