ஞானபீட விருது | தமிழ் எழுத்தாளர்களை தவிர்ப்பது ஏன்? - கவிஞர் வைரமுத்து கேள்வி
22 ஆண்டுகளாக தமிழ் மொழிக்கு ஞானபீட விருது வழங்கப்படாதது தற்செயலானது இல்லை என தமிழ்ச் சமூகம் கவலையுறுவதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
சமஸ்கிருத மொழிக்காக சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும் உருது மொழிக்காக இலக்கிய ஆளுமை குல்சாரும் இந்த ஆண்டு ஞானபீட விருதைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி தருகிறது இரு பேராளுமைகளுக்கும் வாழ்த்துக்கள். ஆனால், ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் தமிழ்மொழியை 22ஆண்டுகள் தவிர்த்தே வருவது தற்செயலானதன்று என்று தமிழ்ச் சமூகம் கவலையுறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முழுத் தகுதிகொண்ட முதிர்ந்த பல படைப்பாளிகள் காலத்தால் உதிர்ந்தே போயிருக்கிறார்கள் என்றும், வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும் தூண்டிவிடுவது கடமையாகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கிய உலகின் உயரிய பரிசாக கருதப்படும் ஞானபீட விருதைப் பெறும் இரண்டாவது தமிழர் ஜெயகாந்தன் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு இந்திய இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள சிறப்பான சேவைக்காக ஞானபீட விருதைப் பெற்றார். இலக்கிய உலகின் ஜாம்பவான் ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழில் இதுவரை எவருக்கும் ஞானபீட விருது வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.