Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக-வின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

01:20 PM Feb 20, 2024 IST | Web Editor
Advertisement

அதிமுக அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வதும், நாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்தி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும், திமுக அரசுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

தொடர்ந்து, இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 20) காலை 10 மணிக்கு தாக்கல் செய்து பேசினார்.

இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில்,  வேளாண் பட்ஜெட் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

“திமுக அரசு நான்காவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எதிர்பார்த்த பயன் இல்லை. 2024-2025-ம் ஆண்டு பட்ஜெட்டை வார்த்தை ஜாலங்களால் நிரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஏமாற்றும் முயற்சியாக இருந்ததே தவிர, எந்த நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ இந்த நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை.

அதிமுக அரசு அதிக கடன் வாங்கி, வருவாய் செலவினங்கள் மேற்கொள்வதாக குறை கூறிய திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வருவாய்ப் பற்றாக்குறையை அறவே நீக்கிவிடுவோம் என்று வாய்ஜாலம் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசு உறுதி அளித்தபடி நிதிநிலையை மேம்படுத்தியதா? என்றால் இல்லை.

குறுவை சாகுபடி விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை தேவை. நீரின்றி காய்ந்த சம்பா, தாளடி சாகுபடி பயிரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான விளைநிலங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

காவிரி நதிநீர் பங்கீடு முறையாக பெறாத காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும். நெல், கரும்பு குறித்து தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடி சேர்க்கப்படவில்லை. குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையின் மீது பதில் அளிக்கும் போது, தனது அரசின் சாதனைகளாக 10 சாதனைகளைக் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் தமிழ்நாட்டின் சாதனையாகச் சொல்லலாமே தவிர, திமுக அரசின் சாதனை என்று சொல்ல முடியாது. பிறருடைய சாதனைகளை, குறிப்பாக அதிமுக அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வதும், நாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்தி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும், திமுக அரசுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது” 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags :
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்Agricultural BudgetagricultureAIADMKBudget 2024Budget UpdateDMKEdappadi palanisamyMK StalinMRK PanneerselvamNews7Tamilnews7TamilUpdatesTamilNaduTAMILNADU BUDGET 2024TN AssemblyTN Assembly 2024
Advertisement
Next Article