’ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை’- சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக கடந்த 27.07.2025ம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார்.
இதையறிந்த அவரின் சகோதரரான சுர்ஜித்(20), அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி கே.டி.சி நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையாளி சுர்ஜித் போலீசில் சரணடைந்த நிலையில், சுர்ஜித்தின் பெற்றோரான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், இளம்பெண்ணின் தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழ் நாடு அரசு கடந்த மாதம் 30ம் தேதி இந்த வழக்கினை சிபிசிஐடியிக்கு மாற்றியது. இதையடுத்து, சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நேற்று இரவு முதல், சிபிசிஐடி அலுவலகத்தில், இரண்டு டி.எஸ்.பி-கள் தலைமையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் மற்றும் சரவணன் இருவரிடமும் தனித்தனியாக விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சம்பவ இடத்திற்கு சுர்ஜித்தை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் கொலை எப்படி நடந்தது என்பது குறித்து சிபிசிஐடி போலிசாருக்கு நடித்துக் காட்டினார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.